சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.099   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இன்று நன்று, நாளை நன்று
பண் - நட்டராகம்   (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=CrD_aLf3ntE
4.051   திருநாவுக்கரசர்   தேவாரம்   நெற்றி மேல் கண்ணினானே! நீறு
பண் - திருநேரிசை   (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=jI9dsAR0N9g
5.078   திருநாவுக்கரசர்   தேவாரம்   சங்கு உலாம் முன்கைத் தையல்
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=mJZCB9wqOjk
6.081   திருநாவுக்கரசர்   தேவாரம்   கண் தலம் சேர் நெற்றி
பண் - திருத்தாண்டகம்   (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=SggFtlZ_vRU

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.099   இன்று நன்று, நாளை நன்று  
பண் - நட்டராகம்   (திருத்தலம் திருக்கோடி (கோடிக்கரை) ; (திருத்தலம் அருள்தரு வடிவாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு கோடீசுவரர் திருவடிகள் போற்றி )
இன்று நன்று, நாளை நன்று என்று நின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போக விட்டுப் போதுமின்!
மின் தயங்கு சோதியான் வெண்மதி, விரிபுனல்,
கொன்றை, துன்று சென்னியான் கோடி காவு சேர்மினே!

[1]
அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்து இராது நீர்,
நல்லது ஓர் நெறியினை நாடுதும், நட(ம்)மினோ!
வில்லை அன்ன வாள் நுதல் வெள்வளை ஒர் பாகம் ஆம்
கொல்லை வெள்ளை ஏற்றினான் கோடி காவு சேர்மினே!

[2]
துக்கம் மிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்து நீர்,
தக்கது ஓர் நெறியினைச் சார்தல் செய்யப் போதுமின்!
அக்கு அணிந்து, அரைமிசை, ஆறு அணிந்த சென்னி மேல்
கொக்கு இறகு அணிந்தவன் கோடி காவு சேர்மினே!

[3]
பண்டு செய்த வல்வினை பற்று அறக் கெடும் வகை
உண்டு; உமக்கு உரைப்பன், நான்; ஒல்லை நீர் எழுமினோ!
மண்டு கங்கை செஞ்சடை வைத்து மாது ஒர்பாகமாக்
கொண்டு உகந்த மார்பினான் கோடி காவு சேர்மினே!

[4]
முன்னை நீர் செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது
இன்னம் நீர் இடும்பையின் மூழ்கிறீர், எழு(ம்)மினோ!
பொன்னை வென்ற கொன்றையான், பூதம் பாட ஆடலான்,
கொல் நவிலும் வேலினான், கோடி காவு சேர்மினே!

[5]
ஏவம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தல் ஆம் எனப்
பாவம் எத்தனையும் நீர் செய்து ஒரு பயன் இலை;
காவல் மிக்க மா நகர் காய்ந்து வெங்கனல் படக்
கோவம் மிக்க நெற்றியான் கோடி காவு சேர்மினே!

[6]
ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்து நீர்,
மாண் அழிந்த மூப்பினால் வருந்தல் முன்னம் வம்மினோ!
பூணல் வெள் எலும்பினான், பொன்திகழ் சடை முடிக்
கோணல் வெண்பிறையினான், கோடிகாவு சேர்மினே!

[7]
மற்று இ(வ்) வாழ்க்கை மெய் எனும் மனத்தினைத் தவிர்ந்து
நீர்,
பற்றி வாழ்மின், சேவடி! பணிந்து வந்து எழுமினோ!
வெற்றி கொள் தசமுகன், விறல் கெட இருந்தது ஓர்
குற்றம் இல் வரையினான் கோடி காவு சேர்மினே!

[8]
மங்கு நோய் உறும் பிணி மாயும் வண்ணம் சொல்லுவன்;
செங்கண் மால், திசைமுகன், சென்று அளந்தும் காண்கிலா
வெங் கண் மால்விடை உடை வேதியன் விரும்பும் ஊர்,
கொங்கு உலாம் வளம் பொழில், கோடி காவு சேர்மினே!

[9]
தட்டொடு தழை மயில் பீலி கொள் சமணரும்,
பட்டு உடை விரி துகிலினார்கள், சொல் பயன் இலை;
விட்ட புன் சடையினான், மேதகும் முழவொடும்
கொட்டு அமைந்த ஆடலான், கோடிகாவு சேர்மினே!

[10]
கொந்து அணி குளிர்பொழில் கோடி காவு மேவிய
செந்தழல் உருவனை, சீர்மிகு திறல் உடை
அந்தணர் புகலியுள் ஆய கேள்வி ஞானசம்
பந்தன தமிழ் வல்லார் பாவம் ஆன பாறுமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.051   நெற்றி மேல் கண்ணினானே! நீறு  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருக்கோடி (கோடிக்கரை) ; (திருத்தலம் அருள்தரு வடிவாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு கோடீசுவரர் திருவடிகள் போற்றி )
நெற்றி மேல் கண்ணினானே! நீறு மெய் பூசினானே!
கற்றைப் புன் சடையினானே! கடல் விடம் பருகினானே!
செற்றவர் புரங்கள் மூன்றும் செவ் அழல் செலுத்தினானே!
குற்றம் இல் குணத்தினானே! கோடிகா உடைய கோவே!

[1]
கடி கமழ் கொன்றையானே! கபாலம் கை ஏந்தினானே!
வடிவு உடை மங்கை தன்னை மார்பில் ஓர் பாகத்தானே!
அடி இணை பரவ நாளும் அடியவர்க்கு அருள் செய்வானே!
கொடி அணி விழவு அது ஓவாக் கோடிகா உடைய கோவே!

[2]
நீறு மெய் பூசினானே! நிழல் திகழ் மழுவினானே!
ஏறு உகந்து ஏறினானே! இருங் கடல் அமுது ஒப்பானே!
ஆறும் ஓர் நான்கு வேதம்! அறம் உரைத்து அருளினானே!
கூறும் ஓர் பெண்ணினானே! கோடிகா உடைய கோவே!

[3]
காலனைக் காலால் செற்று, அன்று, அருள் புரி கருணையானே!
நீலம் ஆர் கண்டத்தானே! நீள் முடி அமரர்கோவே!
ஞாலம் ஆம் பெருமையானே! நளிர் இளந்திங்கள் சூடும்
கோலம் ஆர் சடையினானே! கோடிகா உடைய கோவே!

[4]
பூண் அரவு ஆரத்தானே! புலி உரி அரையினானே!
காணில் வெண் கோவண(ம்) மும், கையில் ஓர் கபாலம் ஏந்தி,
ஊணும் ஊர்ப் பிச்சையானே! உமை ஒரு பாகத்தானே!
கோணல் வெண் பிறையினானே! கோடிகா உடைய கோவே!

[5]
கேழல் வெண் கொம்பு பூண்ட கிளர் ஒளி மார்பினானே!
ஏழையேன் ஏழையேன் நான் என் செய்கேன்? எந்தை பெம்மான்!
மாழை ஒண்கண்ணினார்கள் வலை தனில் மயங்குகின்றேன்;
கூழை ஏறு உடைய செல்வா! கோடிகா உடைய கோவே!

[6]
அழல் உமிழ் அங்கையானே! அரிவை ஓர் பாகத்தானே!
தழல் உமிழ் அரவம் ஆர்த்துத் தலை தனில் பலி கொள்வானே!
நிழல் உமிழ் சோலை சூழ நீள் வரி வண்டு இனங்கள்
குழல் உமிழ் கீதம் பாடும் கோடிகா உடைய கோவே!

[7]
ஏ அடு சிலையினாலே புரம் அவை எரி செய்தானே!
மா வடு வகிர் கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானே!
ஆவடு துறை உளானே! ஐவரால் ஆட்டப் பட்டேன்!
கோ அடு குற்றம் தீராய், கோடிகா உடைய கோவே!

[8]
ஏற்ற நீர்க் கங்கையானே! இரு நிலம் தாவினானும்,
நாற்ற மா மலர் மேல் ஏறும் நான்முகன், இவர்கள் கூடி
ஆற்றலால் அளக்கல் உற்றார்க்கு அழல் உரு ஆயினானே!
கூற்றுக்கும் கூற்று அது ஆனாய்! கோடிகா உடைய கோவே!

[9]
பழக நான் அடிமை செய்வேன்-பசுபதீ! பாவ நாசா!
மழ களியானையின் தோல் மலைமகள் வெருவப் போர்த்த
அழகனே! அரக்கன் திண் தோள் அரு வரை நெரிய ஊன்றும்
குழகனே! கோல மார்பா! கோடிகா உடைய கோவே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.078   சங்கு உலாம் முன்கைத் தையல்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருக்கோடி (கோடிக்கரை) ; (திருத்தலம் அருள்தரு வடிவாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு கோடீசுவரர் திருவடிகள் போற்றி )
சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர் பாகத்தன்,
வெங் குலாம் மதவேழம் வெகுண்டவன்,
கொங்கு உலாம் பொழில் கோடிகாவா! என,
எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே.

[1]
வாடி வாழ்வது என் ஆவது? மாதர்பால்
ஓடி, வாழ்வினை உள்கி, நீர், நாள்தொறும்
கோடிகாவனைக் கூறீரேல், கூறினேன்:
பாடிகாவலில் பட்டுக் கழிதிரே.

[2]
முல்லை நல்முறுவல்(ல்) உமை பங்கனார்,
தில்லை அம்பலத்தில்(ல்) உறை செல்வனார்,
கொல்லை ஏற்றினர், கோடிகாவா! என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே.

[3]
நா வளம் பெறும் ஆறு, மன் நன்னுதல்
ஆமளம் சொலி, அன்பு செயின்(ன்) அலால்,
கோமளஞ்சடைக் கோடிகாவா! என,
ஏவள்? என்று எனை ஏசும், அவ் ஏழையே.

[4]
வீறுதான் பெறுவார் சிலர் ஆகிலும்,
நாறு பூங்கொன்றைதான் மிக நல்கானேல்,
கூறுவேன், கோடிகா உளாய்? என்று; மால்
ஏறுவேன்; நும்மால் ஏசப்படுவனோ?

[5]
நாடி நாரணன், நான்முகன், வானவர்
தேடி ஏசறவும், தெரியாதது ஓர்
கோடிகாவனைக் கூறாத நாள் எலாம்
பாடிகாவலில் பட்டுக் கழியுமே.

[6]
வரங்களால் வரையை எடுத்தான் தனை
அரங்க ஊன்றி அருள் செய்த அப்பன் ஊர்,
குரங்கு சேர் பொழில் கோடிகாவா! என
இரங்குவேன், மனத்து ஏதங்கள் தீரவே.

[7]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.081   கண் தலம் சேர் நெற்றி  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருக்கோடி (கோடிக்கரை) ; (திருத்தலம் அருள்தரு வடிவாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு கோடீசுவரர் திருவடிகள் போற்றி )
கண் தலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய்; கல் மதில் சூழ் கந்த மாதனத்தான் கண்டாய்;
மண்தலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய்; மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய்;
விண்தலம் சேர் விளக்கு ஒளி ஆய் நின்றான் கண்டாய்; மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்;
கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன்
கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

[1]
வண்டு ஆடு பூங்குழலாள் பாகன் கண்டாய்; மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய்;
பண்டு ஆடும் பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்;   பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய்;
செண்டு ஆடி அவுணர் புரம் செற்றான் கண்டாய்;   திரு ஆரூர்த் திருமூலட்டானன் கண்டாய்;
கொண்டாடும் அடியவர் தம் மனத்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

[2]
அலை ஆர்ந்த புனல் கங்கைச் சடையான் கண்டாய்; அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனான் கண்டாய்;
மலை ஆர்ந்த மடமங்கை பங்கன் கண்டாய்; வானோர்கள் முடிக்கு அணி ஆய் நின்றான் கண்டாய்;
இலை ஆர்ந்த திரிசூலப்படையான் கண்டாய்; ஏழ்   உலகும் ஆய் நின்ற எந்தை கண்டாய்;
கொலை ஆர்ந்த குஞ்சரத் தோல் போர்த்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

[3]
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான் கண்டாய்; மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான் கண்டாய்;
புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய்; பூந்துருத்திப் பொய் இலியாய் நின்றான் கண்டாய்;
அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய்; ஐயாறு அகலாத ஐயன் கண்டாய்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

[4]
வார் ஆர்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்; மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய்;
போர் ஆர்ந்த மால்விடை ஒன்று ஊர்வான் கண்டாய்; புகலூரை அகலாத புனிதன் கண்டாய்;
நீர் ஆர்ந்த நிமிர்சடை ஒன்று உடையான் கண்டாய்; நினைப்பார் தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய்;
கூர் ஆர்ந்த மூ இலை வேல் படையான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

[5]
கடி மலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்; கண் அப்ப விண் அப்புக் கொடுத்தான் கண்டாய்;
படி மலிந்த பல்பிறவி அறுப்பான் கண்டாய்; பற்று அற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்;
அடி மலிந்த சிலம்பு அலம்பத் திரிவான் கண்டாய்; அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய்;
கொடி மலிந்த மதில்-தில்லைக் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

[6]
உழை ஆடு கரதலம் ஒன்று உடையான் கண்டாய்; ஒற்றியூர் ஒற்றியா உடையான் கண்டாய்;
கழை ஆடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய்; காளத்திக் கற்பகம் ஆய் நின்றான் கண்டாய்;
இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய்; என் நெஞ்சத்துள்-நீங்கா எம்மான் கண்டாய்;
குழை ஆட நடம் ஆடும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

[7]
படம் ஆடு பன்னகக்கச்சு அசைத்தான் கண்டாய்; பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்;
நடம் ஆடி ஏழ் உலகும் திரிவான் கண்டாய்; நால்மறையின் பொருள் கண்டாய்; நாதன் கண்டாய்;
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய்; கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய்;
குடம் ஆடி இடம் ஆகக் கொண்டான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

[8]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list